follow the truth

follow the truth

November, 28, 2024
Homeஉள்நாடுஐக்கிய மக்கள் சக்தி தரப்பினரிடம் நாட்டை ஒப்படையுங்கள் - மயந்த திஸாநாயக்க

ஐக்கிய மக்கள் சக்தி தரப்பினரிடம் நாட்டை ஒப்படையுங்கள் – மயந்த திஸாநாயக்க

Published on

“நாட்டின் நிர்வாகத்தை உரியவாறு முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலையிலுள்ள அரசு, அந்தப் பொறுப்பை எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான எமது தரப்பினரிடம் கையளித்துவிட்டு ஒதுங்கிக்கொள்ள வேண்டும்.” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க வலியுறுத்தினார்.

மேலும் “எரிபொருள் விலைகளை அதிகரிக்கமாட்டோம் என்று வாக்குறுதியளித்த அரசு, இரவோடு இரவாக அவற்றின் விலைகளை அதிகரித்துள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பான கோரிக்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரலால் முன்வைக்கப்பட்டிருப்பதுடன், அரசின் செலவுகளைக் குறைத்தல், மக்களின் வாகனப்பயன்பாட்டை மட்டுப்படுத்துதல், டொலர் நெருக்கடியைக் கையாளுதல் ஆகியன அதற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

கடந்த திங்கட்கிழமை மாலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்ற போதிலும், எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளமை குறித்து அதில் கலந்து கொண்ட அமைச்சர்கள் அறிந்திருக்கவில்லை.

உலக சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை நூற்றுக்கு 4 சதவீதத்தால் குறைவடைந்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், மங்கள சமரவீரவினால் அறிமுகப்படுத்தப்பட்ட எரிபொருள் விலைச்சூத்திரம் அமுலிலிருந்திருந்தால் இப்போது எரிபொருள் விலைகள் குறைவடைந்திருக்கும்.

ஆனால், தற்போதைய அரசால் மேற்கொள்ளப்படும் முட்டாள்தனமான தீர்மானங்களின் விளைவாக எரிபொருள் உள்ளடங்கலாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்தமுடியாத நிலையேற்பட்டுள்ளது. எரிபொருள் விலையேற்றத்துடன் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள், எரிவாயு சிலிண்டர் விலை, பேருந்து கட்டணம் உள்ளிட்ட அனைத்திலும் அதிகரிப்பு ஏற்படும்.

இவற்றால் உயர்வடைந்து வரும் வாழ்க்கைச் செலவைத் தாங்கிக்கொள்ளமுடியாத நிலையில் மக்கள் இருக்கின்றார்கள். இவ்வாறானதொரு பின்னணியில் நாட்டின் நிர்வாகத்தை உரியவாறு முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலையிலுள்ள அரசு, அந்தப் பொறுப்பை எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான எமது தரப்பினரிடம் கையளித்துவிட்டு ஒதுங்கிக்கொள்ளவேண்டும்.

நாம் ஆட்சிப்பீடமேறும் பட்சத்தில் நாட்டின் நிர்வாகத்தை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வோம் என்பதைக் காண்பிக்கும் வகையில், ஒவ்வொரு துறைகள் தொடர்பான எமது கொள்கைத்திட்டத்தை வெளியிட்டு வருகின்றோம். நாம் தேர்தலை முன்னிறுத்தி இவற்றைச் செய்யவில்லை. மாறாக நாட்டு மக்களின் நலனை உறுதிப்படுத்துவது மாத்திரமே எமது இலக்காகும்.

அடுத்ததாக எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவ்வறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதுடன் அதுபற்றி கலந்துரையாடப்படவுமில்லை.

நாடாளுமன்ற கூட்டத் தொடர் பிற்போடப்பட்டிருப்பதன் காரணமாக அதுவரையில் இவ்வறிக்கையை நாடாளுமன்றத்திலும் சமர்ப்பிக்கமுடியாது. எனவே, நாட்டில் என்ன நிகழ்கின்றது என்பது குறித்து அமைச்சரவையோ அல்லது நாடாளுமன்றமோ அறியாத நிலையே தற்போது காணப்படுகின்றது” என தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச “நான் ஆட்சிப்பீடமேறினால் நாட்டு மக்கள் பசியில் வாடுவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டேன் எனவும், அவர்களை வர்த்தக நிலையங்களில் நீண்ட நேரம் வரிசைகளில் காத்திருக்கச் செய்யமாட்டேன்” என ஐக்கிய மக்கள் சக்தியால் முன்னெடுக்கப்பட்டுவரும் வைத்தியசாலைகளுக்கு அவசியமான மருத்துவ உபகரணங்களை வழங்கிவைக்கும் செயற்றிட்டத்தில் உரை நிகழ்த்தும் போது  தெரிவித்தார் என்பதும் குறிப்பிடதக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அம்பாறையில் உழவு இயந்திரம் விபத்து – மதரசா அதிபர் உள்ளிட்ட 4 பேர் கைது

அம்பாறை காரைதீவு மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும்...

சொலிசிட்டர் ஜெனரலாக விராஜ் தயாரத்ன நியமனம்

சொலிசிட்டர் ஜெனரலாக ஜனாதிபதி சட்டத்தரணி விராஜ் தயாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்புமேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றியுள்ளார். ஜனவரி 2020 முதல்...

தற்காலிக இலக்கத் தகடு பாவனை டிசம்பர் 15ம் திகதியுடன் நிறைவு

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் வாகன இலக்கத் தகடுகள் வழங்குவது தொடர்பான சிக்கல் நிலை தீர்க்கப்பட்டு மீள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வாகனத்தின்...