மருத்துவமனைக்கு வருகை தரும் நோயாளிக்குத் தேவையான மன சுதந்திரம் இருக்க வேண்டும் என்றும், மருத்துவமனை என்பது படுக்கை, மருந்து, தடுப்பூசி மற்றும் சுகாதார சேவையாக மட்டுமல்லாமல், நோயாளிக்கு மனரீதியாக சிகிச்சை அளிக்கும் இடமாகவும் இருக்க வேண்டும் என்றும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சர், தான் பிறந்த அகலவத்தை பிம்புர மருத்துவமனையில் சிகிச்சை சேவைகளை ஆய்வு செய்த பின்னர், அதிகாரிகள் மற்றும் மருத்துவமனை பணியாளர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், ஒவ்வொரு மருத்துவமனையையும் சுற்றுச்சூழலின் அழகைப் பாதுகாத்து, கட்டிடக்கலையின் தனித்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில் மேம்படுத்தவும், அதன் மூலம் மருத்துவமனை அமைப்பை நோயாளி களுக்கு சிறந்த மனநலனை வழங்கும் இடமாக மாற்றவும் திட்டங்கள் வகுக்கப்படுவதாகக் கூறினார்.
நாட்டின் சுகாதாரத் துறையில் சேவைகளை வழங்குவதில் மிக முக்கியமான துறைகளாக இருக்கும் 130 இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை மருத்துவமனைகளுக்குத் தேவையான வசதிகள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கு முயற்சி எடுப்பதாகவும் அமைச்சர் கூறினார். நாட்டின் மொத்த மருத்துவமனை அமைப்பில் உள்ள மொத்த படுக்கைகளின் எண்ணிக்கையில் 75 சதவீதம் இந்த மருத்துவமனை அமைப்பில் அடங்கும் என்றும் அவர் கூறினார். இது கிட்தட்ட 60,000 படுக்கைகள் என்று கூறிய அமைச்சர், தற்போதுள்ள சிறப்பு மருத்துவர்கள் உட்பட மருத்துவமனை ஊழியர்கள் பற்றாக்குறை மற்றும் வளங்கள் பற்றாக்குறை காரணமாக இந்த 130 மருத்துவமனைகளில் தேவையான சேவைகளை வழங்குவதில் சிக்கல்கள் எழுந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அகலவத்தை பிம்புர அடிப்படை மருத்துவமனையின் ஆய்வகம், கதிரியக்கவியல் பிரிவு, மருந்தகம், பல் சிகிச்சை பிரிவு, மயக்க மருந்து பிரிவு, மகப்பேறு பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு பிசியோதெரபி பிரிவு, ஓய்வறை, சுகாதார கல்வி பிரிவு மற்றும் சமையலறை ஆகியவற்றையும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பார்வையிட்டார்.
மருத்துவமனையில் தற்போது மூடப்பட்டுள்ள மகளிர் மருத்துவ மற்றும் மகப்பேறு பிரிவு கட்டிடத்தை ஆய்வு செய்த அமைச்சர், கட்டிடம் பயன்படுத்தக்கூடிய நிலையில் இருப்பதால், உடனடியாக புதுப்பித்தல் பணிகளை மேற்கொண்டு சிகிச்சை சேவைகளுக்குப் பயன்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர், சிறப்பு மருத்துவர் டி.ஏ.ஆர்.கே. தில்ருக்ஷி, பிம்புர அடிப்படை மருத்துவமனையில் மருத்துவம், குழந்தைகள், மனநலம், தோல், அறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவம் மற்றும் குடும்பக் கட்டுப்பாடு, ஊட்டச்சத்து, சுவாச நோய்கள், மற்றும் பாலியல் ரீதியாக பரவும் நோய்களுக்கான மருத்துவ பிரிவுகள் இயங்கி வருவதாக சுட்டிக்காட்டினார். இந்த ஆண்டு ஒரு புதிய இரத்த வங்கி, முழுமையாக பொருத்தப்பட்டு அறுவை சிகிச்சை அரங்கம் மற்றும் உள் மருத்துவ மருத்துவமனையை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.