நீர் சுத்திகரிப்புக்கு பயன்படுத்தப்படும் இரசாயனங்களின் தரம் குறித்து தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
நீர் சுத்திகரிப்புக்குத் தேவையான 1,500 தொன் சுண்ணாம்பு வாங்குவதற்கு தேசிய செய்தித்தாள்கள் ஊடாக திறந்த ஏலம் கோரப்பட்டதாகவும், விலைமனுக் கோரல் ஆவணங்களுடன் வழங்கப்பட்ட மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட பின்னர், பரிசோதனையில் தேர்ச்சி பெற்று மிகக் குறைந்த ஏலத்தை சமர்ப்பித்த முழு தகுதி வாய்ந்த ஏலதாரருக்கு குறித்த விலைமனுக் கோரல் வழங்கப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்பிறகு, சபை அதிகாரிகள் குழு ஒன்று ஏற்றுமதிக்கு முன் சாட்சிய தர ஆய்வில் பங்கேற்ற நிலையில், குறித்த சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட மாதிரிகள் விவரக்குறிப்புகளுக்கு இணங்க இருந்தன என்றும், எனவே அவை ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்பட்டன என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஆரம்பத்தில் ஒப்பந்ததாரரால் 380 தொன் சுண்ணாம்பு நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு சபையின் களஞ்சியத்திற்கு வழங்கப்பட்ட நிலையில், பின்பற்றப்படும் முறைகளின்படி, குறித்த இருப்பில் இருந்து எதேச்சையாக மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்ட போது, சுண்ணாம்பில் உள்ள குரோமியம் உள்ளடக்கம் விவரக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள 10mg/kh வரம்பை விட அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.
அதன்படி, சபை மற்றும் வெளிப்புற ஆய்வகங்களிலிருந்து பெறப்பட்ட முடிவுகளில் குரோமியம் உள்ளடக்கம் 11-14 மி.கி/கிலோ வரை இருப்பதைக் காட்டிய நிலையில், மேலும் வழங்குனர்களுடன் இணைந்து எடுக்கப்பட்ட மாதிரியிலும் 11.3 mg/kh குரோமியம் இருப்பது கண்டறியப்பட்டது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த கையிருப்பு விவரக்குறிப்புகளுக்கு இணங்காததால், அது சபையின் கையிருப்பில் சேர்க்கப்படவில்லை என்றும், தனித்தனியாக சேமித்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த இருப்பு எந்த சுத்திகரிப்பு செயல்முறைக்கும் பயன்படுத்தப்படவில்லை என்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையில், குறித்த ஒப்பந்தத்தின் கீழ் இரண்டாவது சரக்கு அனுப்புதலாக மேலும் 209 தொன் பெறப்பட்டதாகவும், தற்போது எதேச்சையாக மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருவதாகவும் தலைவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.