இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய கடற்றொழிலைக் கட்டுப்படுத்துவதற்காகச் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், ஓரிரு வாரங்களில் இந்த பிரச்சினையைத் தீர்க்க முடியாது எனவும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது நீண்டகாலமாக நிலவும் பிரச்சினையாகும்.
பல அரசாங்கங்கள் கலந்துரையாடிய பிரச்சினையாகும்.
இந்திய – இலங்கை அரசாங்கங்களுக்கு இடையே பல சந்தர்ப்பங்களில் இது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.
இதன்படி, புதிய அரசாங்கம் ஆட்சியமைத்ததன் பின்னரும் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த பின்னணியில் இலங்கை கடற்படை சுற்றி வளைப்புகளையும் கைது நடவடிக்கைகளையும் அதிகரித்துள்ளது. அதேநேரம் இந்த விடயம் தொடர்பில் இந்தியாவுடன் தொடர்ந்தும் கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன.
எவ்வாறாயினும் எதிர்வரும் ஓரிரு வாரங்களில் இந்த பிரச்சினைக்குரிய தீர்வை பெற்றுக் கொள்ள முடியும் என நினைக்கவில்லை. இலங்கையின் கடல் வளத்தையும், கடற்றொழிலாளர்களையும் பாதுகாப்பதே எமது பிரதான இலக்காகும்.
இதனை அடிப்படையாகக் கொண்டே பேச்சுவார்த்தைகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகிறது..” அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.