அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறிய, இந்தியாவை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அந்நாட்டின் இராணுவ விமானம் மூலம் இன்று பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் வந்தடைந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க அதிபராக டிரம்ப் இரண்டாவது முறை பதவியேற்ற பின், இவ்வாறு இந்திய சட்டவிரோத குடியேறிகள் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவது இதுவே முதன்முறை.
விமானத்தில் வந்தவர்களில் பெரும்பாலானோர் பஞ்சாப் மற்றும் அண்டை மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவில் சுமார் 18 ஆயிரம் இந்தியர்கள் ஆவணமின்றி இருப்பதாக கண்டறியப்பட்டது. அவர்களை வெளியேற்ற அமெரிக்க முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் முதற்கட்டமாக 100-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அமெரிக்காவின் சி-17 ராணுவ விமானத்தில் ஏற்றப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.