எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிப்பின் ஊடாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவது குறித்து அடுத்து நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாட உள்ளதாகவும் அமைச்சர் டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிப்பு பணவீக்கத்தில் 3 சதவீதம் தாக்கம் செலுத்தும் என்று மத்திய வங்கி எதிர்வுகூறியுள்ளது. எனவே எரிபொருள் பாவனை தொடர்பில் ஒழுக்கத்தினை பேண வேண்டும் என்பதே பிரதான கோரிக்கையாகவுள்ளது. எனினும் இதன் காரணமாக அதிகளவில் பாதிக்கப்படக் கூடிய மக்கள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்படுபவர்களுக்கு அரசாங்கம் என்ற ரீதியில் எவ்வாறு உதவுவது என்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அதற்காக எம்மால் முன்னெடுக்கப்படக் கூடிய நடைமுறைகள் எவை என்பது தொடர்பில் அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்றும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.