குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
அதன்படி, அவர் அங்குள்ள ஒரு பொது சிறைக்கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
புதுக்கடை பதில் நீதவான் பவித்ரா சஞ்சீவனி முன்னிலையில் நேற்று பிரசன்னப்படுத்தப்பட்டதன் பின்னர், யோஷித ராஜபக்ஷ நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இரத்மலானை, சிறிமல் பிளேஸில் 34 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வீடு கொண்ட நிலத்தை கொள்வனவு செய்தமை தொடர்பாக, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த நுழைவாயிலுக்கு அருகில் நேற்று காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் அவர் கைது செய்யப்பட்டார்.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் நடத்தப்பட்ட விசாரணையில், குறித்த வழக்கில் அவரை சந்தேக நபராகப் பெயரிட போதுமான ஆதாரங்கள் இருப்பதாகத் தெரியவந்ததை அடுத்து, சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் யோஷித ராஜபக்ஷ கைது செய்யப்பட்டார்.
இதேவேளை, அரசியல் பழிவாங்கலின் அடிப்படையில் யோஷித ராஜபக்ஷ கைதுசெய்யப்படவில்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு இதனைக் குறிப்பிட்ட அவர், நாட்டில் அமுலில் உள்ள சட்டத்தின் பிரகாரமே அவர் கைதுசெய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.