இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனம் (CCCI), உள்நாட்டு நுகர்வு மற்றும் இலங்கையின் ஏற்றுமதி சார்ந்த தேங்காய்த் தொழிலுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் ஒரு தனித்துவமான தேங்காய் பற்றாக்குறையை சமாளிக்க உடனடியாக அரசு தலையிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. கலாச்சார மற்றும் பொருளாதார அடித்தளமாக, தேங்காய் வீட்டுக்கு தேவையான உணவுக்கும் இன்றியமையாதவை மற்றும் நாட்டிற்கான அந்நிய செலாவணிக்கும் குறிப்பிடத்தக்க மூலமாவும் உள்ளது.
நாட்டின் சராசரி மாத தேவை 250 மில்லியன் தேங்காய்கள் ஆகும், இதில் 150 மில்லியன் உள்நாட்டில் நுகரப்படுகிறது, மீதமுள்ள 100 மில்லியன் ஏற்றுமதித் தொழிலுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.
தென்னை ஆராய்ச்சி நிறுவனம் (CRI) வழங்கிய தரவுகளின் அடிப்படையில், 2021 முதல் 2024 வரை 700 மில்லியனுக்கும் அதிகமான தேங்காய்களின் விளைச்சல் குறைப்பை நாங்கள் சந்தித்தோம். ஜனவரி முதல் ஏப்ரல் 2025 வரை சுமார் 200 மில்லியன் தேங்காய்களின் உற்பத்தி பற்றாக்குறை மேலும் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த பற்றாக்குறை ஏற்கனவே விலைவாசி உயர்வுக்கு வழிவகுத்ததுடன், வீட்டுச் செலவையும் பாதித்தது, மேலும் ஏற்றுமதி உற்பத்தியாளர்களுக்கான மூலப்பொருட்களின் விநியோகத்தை பாதித்துள்ளது.
2023 ஆம் ஆண்டில், தேங்காய் பொருட்கள் ஏற்றுமதி 708 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியது, மேலும் நவம்பர் 2024 இல், நாடு 782 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியது, இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 20% அதிகரிப்பை காட்டியது.
ஆண்டு வருவாய் 850 மில்லியன் அமொிக்க டொலராக அதிகரிக்கப்படுமென மதிப்பிடப்பட்டுள்ளது, இது ஆண்டுக்கு ஆண்டு 17% வளர்ச்சியுடன் மிக உயர்ந்த வருமானத்தைக் குறிக்கிறது. துறையின் வருவாய் திறனையும் அது ஆதரிக்கும் வாழ்வாதாரங்களையும் பாதுகாக்க இந்த துறையை நிலைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
தேங்காய் தொழில், முறைப்படுத்தப்பட்ட துறையில் 750,000 க்கும் அதிகமான நேரடி வேலைவாய்ப்புகளை வழங்குகிறது மற்றும் இன்னும் பல லட்சக்கணக்கானோருக்கு மறைமுகமாக ஒத்துழைப்பு வழங்குகிறது, இது இலங்கை பொருளாதாரத்தின் உயிர்நாடியாகும்.
“தற்போதைய தேங்காய் பற்றாக்குறை வீடுகளுக்கும் ஏற்றுமதியாளர்களுக்கும் இரட்டை நெருக்கடியை ஏற்படுத்துகிறது,” என CCCI இன் தலைவர் ஜயந்த சமரகோன் கூறினார்.
“உடனடி மற்றும் தீர்க்கமான நடவடிக்கை இல்லாமல், இலங்கை உலக சந்தைகளில் அதன் போட்டித்தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும், ஆயிரக்கணக்கான வாழ்வாதாரங்களை ஆபத்தில் ஆழ்த்தும்.”
CCCI ஆல் முன்னிலைப்படுத்தப்பட்ட முக்கிய சவால்கள்:
o செய்கைகயில் ஏற்படும் தாக்கம்:
o அதிக செலவு மற்றும் போதுமான நீர்ப்பாசன நடைமுறைகள் இல்லாததால் உரங்களைப் பயன்படுத்தாதது.
o நோய்கள் பரவுதல் மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள்.
o பூச்சி மற்றும் விலங்கு தாக்குதல்கள்.
o நிலம் துண்டு துண்டாக பிரிக்கப்படுதல்.
அதிகரித்து வரும் விலைகள்: குறைந்த விநியோகம் தேங்காய் விலையை உயர்த்தியுள்ளது, இது அத்தியாவசிய உணவுப் பொருளை பல குடும்பங்களுக்கு பெற்றுக்கொள்ள முடியாததாக ஆக்கியுள்ளது மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.
ஏற்றுமதி இடையூறுகள்: ஏற்றுமதியாளர்கள் முக்கியமான விநியோகச் சங்கிலி சவால்களை எதிர்கொள்கின்றனர், இது சர்வதேச கட்டளைகளை (Orders) பூர்த்தி செய்யும் திறனை அச்சுறுத்துகிறது மற்றும் நம்பகமான ஏற்றுமதியாளர் என்ற இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கிறது.
இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனத்தின் (CCCI) நெருக்கடியைத் தணிக்க பரிந்துரைகள்:
விவசாய ஆதரவு: ஈரப்பதம் பாதுகாப்பு, உரங்கள், பூச்சி கட்டுப்பாடு, மீள் நடவு மற்றும் பிற விவசாய மேம்பாடுகளுக்கு மானியங்களை வழங்க CESS நிதியிலிருந்து 1.5 பில்லியன் ரூபாவை ஒதுக்குங்கள். மேலும், உற்பத்தித்திறனை அதிகரிக்க நீர் முகாமைத்துவம், உரமிடுதல் மற்றும் சூரிய சக்தி உள்ளிட்ட உள்கட்டமைப்பை மேம்படுத்த மென்மையான கடன்களை வழங்குங்கள்.
நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் மாற்று வழிகள்: குறிப்பாக நகர்ப்புறங்களில், புதிய தேங்காய்களுக்கான தேவையைக் குறைக்க, பதப்படுத்தப்பட்ட தேங்காய் பொருட்கள், தேங்காய் பால் பவுடர்/திரவ மற்றும் உலர்த்திய தேங்காய் ஆகியவற்றை ஊக்குவிக்கவும்.
நுகர்வோருக்கு வேண்டுகோள்: இலங்கை தர நிர்ணய நிறுவனம் (SLSI) மற்றும் தேங்காய் மேம்பாட்டு ஆணையம் (CDA) ஆகியவற்றால் சான்றளிக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட பொருட்களுக்கு மாறுவதன் மூலம் தேங்காய் கழிவுகளை குறைக்க மக்களை ஊக்குவிக்கவும்.
உள்நாட்டில் நுகரப்படும் தேங்காய்களில் 20–25% வீணாக்கப்படுவதாக ஆய்வுகள் காட்டுகின்றன. உள்நாட்டு நுகர்வில் 10% குறைப்பு 200 மில்லியன் தேங்காய்களை தொழில்துறைக்கு வெளியிடக்கூடும், இது ஆண்டுதோறும் 160 மில்லியன அமெரிக்க டொலருக்கும் அதிகமான அந்நிய செலாவணியை ஈட்டுகிறது.
குறுகிய கால நடவடிக்கைகள்: விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த, 200 மில்லியன் விதைகள் அல்லது அதற்கு சமமான மூலப்பொருட்களான கொப்பரை சில்லுகள், உலர்ந்த தானியங்கள், தேங்காய் பால் மற்றும் உறைந்த தானியங்கள் போன்றவற்றை இறக்குமதி செய்ய அனுமதிக்கவும். குறிப்பாக எண்ணெய் மற்றும் செயல்படுத்தப்பட்ட கார்பன் தொழில்களுக்கு புதிய தேங்காய்களை இறக்குமதி செய்வது செலவு குறைந்த தீர்வை வழங்குகிறது. சர்வதேச தாவர பாதுகாப்பு மாநாடு (IPPC) வழிகாட்டுதல்களின்படி நிறுவப்பட்ட நெறிமுறைகளின் கீழ், CRI மற்றும் வேளாண் துறையின் தேசிய தாவர தனிமைப்படுத்தல் சேவையின் தலையீட்டின் மூலம் இதைச் செய்யலாம்.
தரத்தின் மதிப்பீடுகள்: உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைகளுக்கு தரம் மற்றும் கிடைக்கும் தன்மையை உறுதி செய்வதற்காக, உலகளாவிய தரநிலைகளுடன் ஒத்துப்போகும் இறக்குமதி செய்யப்பட்ட மூலப்பொருட்களுக்கான நடைமுறை SLSI வழிகாட்டுதல்களை உருவாக்குதல்.
உலகளாவிய சந்தை வாய்ப்புகளைப் பெறுதல்
தேங்காய் சார்ந்த பொருட்களுக்கான உலகளாவிய தேவை ஆண்டுதோறும் 27–30 பில்லியன் அமெரிக்க டொலராக மதிப்பிடப்பட்டுள்ளது – சைவ உணவு மற்றும் தாவர அடிப்படையிலான உணவுமுறைகளின் அதிகரிப்பால் தூண்டப்படுகிறது – இலங்கை தனது சந்தைப் பங்கை விரிவுபடுத்துவதற்கான மகத்தான ஆற்றலைக் கொண்டுள்ளது. நாட்டின் தேங்காய் ஏற்றுமதி வருவாயில் 30% பங்களிக்கும் தேங்காய் உமி சார்ந்த நார் மற்றும் அடி மூலக்கூறுகள், கட்டுப்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் விவசாயத்தை நோக்கிய உலகளாவிய மாற்றத்தின் காரணமாக அதிக தேவையில் உள்ளன.
இதேபோல், இந்தத் துறைக்கு மூன்றாவது பெரிய பங்களிப்பாளரான செயல்படுத்தப்பட்ட கார்பன், வளர்ச்சிக்கு முடிவற்ற வாய்ப்புகளை வழங்குகிறது.
2027 ஆம் ஆண்டுக்குள் இலங்கை 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருவாயை அடைய உதவுவதற்கு CCCI உறுதிபூண்டுள்ளது, இதற்காக ஆண்டுக்கு 4.5 பில்லியன் தேங்காய்கள் தேவைப்படுகின்றன.
இருப்பினும், இந்த இலக்கை அடைவது, உள்ளூர் தேங்காய் விநியோகத்தை உறுதிப்படுத்துதல், விவசாயிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குதல் மற்றும் தேங்காய் தொடர்பான தொழில்களில் புத்தாக்கங்களை வளர்ப்பது மற்றும் உள்நாட்டு நுகர்வுக்கு போதுமான விநியோகத்தை உறுதி செய்வதைப் பொறுத்தது.
“நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது,” என்று CCCI செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார். “கூட்டுறவு மற்றும் உடனடி நடவடிக்கைகள் மூலம், இலங்கை மீண்டு வருவது மட்டுமல்லாமல், தேங்காய்த் தொழிலில் உலகளாவிய தலைவராக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவும் முடியும். சமநிலையை மீட்டெடுப்பதற்கும், ஏற்றுமதி போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கும், அனைத்து இலங்கையர்களுக்கும் மலிவு விலையில் அணுகலை உறுதி செய்வதற்கும் இந்த அணுகுமுறை மிகவும் முக்கியமானது.”