முன்னாள் வர்த்தக அமைச்சராக இருந்த ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை ஜூன் 03 ஆம் திகதி மேலதிக சாட்சிய விசாரணைக்கு அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (21) உத்தரவிட்டுள்ளது.
அவர் வர்த்தக அமைச்சராக இருந்த காலத்தில், சதொச நிறுவன ஊழியர்களை உத்தியோகபூர்வ கடமைகளில் இருந்து நீக்கி, அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியதன் மூலம், அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக, அமைச்சர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வழக்குத் தாக்கல் செய்தது.
இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர். எஸ்.எஸ்.சபுவித முன்னிலையில் அழைக்கப்பட்டது.
வழக்குத் தொடரை பிரதிநிதித்துவப்படுத்திய பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வெளிநாட்டுக்கு சென்றுள்ளதால் சாட்சியங்களை விசாரணை செய்வதற்கு மற்றுமொரு திகதியை வழங்குமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்பில் ஆஜரான அதிகாரி நீதிமன்றில் கோரினார்.
இதன்படி, மேலதிக சாட்சிய விசாரணையை ஜூன் 03 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த உயர்நீதிமன்ற நீதிபதி, அன்றைய தினம் சாட்சிகளை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு எச்சரித்தார்.
2010ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சதொச நிறுவன ஊழியர்களை உத்தியோகபூர்வ கடமைகளில் இருந்து நீக்கி, வர்த்தக அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தி முன்னாள் வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.