பிள்ளையினை முதலாம் வருடத்திற்கு சேர்ப்பதற்காக பத்து சீமெந்து மூடைகளுக்கு 18,520 ரூபா லஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அதிபரை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட பண்டாரவளை பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் இன்று (20) நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடரும் என இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விடுத்த அறிவித்தலை பரிசீலித்த நீதவான், குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
சந்தேக நபரான அதிபர், குறித்த பாடசாலையில் பிள்ளையொன்றைச் சேர்ப்பதற்காக, பத்து சீமெந்துத் தொகுதிக்கான தொகையை, பாடசாலைக்கு முன்பாக அமைந்துள்ள வியாபாரியிடம் செலுத்துமாறு முறைப்பாட்டாளரிடம் உத்தரவிட்டுள்ளார்.
பின்னர், பணம் செலுத்தப்பட்டதாகத் தெரிவித்ததையடுத்து, இது தொடர்பாக விசாரணை நடத்திய இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, இவரைக் கைது செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.