லிட்ரோ எரிவாயுக் கலவையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை எனவும் அது தொடர்பில், சர்வதேச விசேட நிபுணத்துவ நிறுவனங்களின் பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்தார்.
கேஸ் பாவனையில், பொதுமக்கள் வீண் அச்சங்கொள்ளத் தேவையில்லை என்றும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று(20) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கேஸ் கசிவு மற்றும் வெடிப்புச் சம்பவங்களுக்கு, எரிவாயுக் கலவையில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றமே காரணமென்று சில தரப்பினர் கருத்துக்களை முன்வைத்து வருகின்ற போதிலும், இதுவரையில் பதிவாகியுள்ள எந்தவொரு சம்பவத்துக்கும், எரிவாயுக் கலவையில் ஏற்பட்ட மாற்றம்தான் காரணமென உறுதி செய்யப்படவில்லை என்றும் எரிவாயுவின் தரம் காரணமாக அவ்வாறான சம்பவமொன்று ஏற்பட்டதென உறுதி செய்யப்படுமாயின், ஒருவருக்குத் தலா ஒரு மில்லியன் ரூபாய் அடிப்படையில் காப்புறுதி வழங்க லிட்ரோ கேஸ் நிறுவனம் இணங்கியுள்ளதெனவும் குறிப்பிட்டார்.
எரிவாயுவின் தரம் தொடர்பிலான SLS தரச் சான்றிதழுடன் கூடிய பரிந்துரைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன என்றும் திரவ எரிவாயுக் கலவையானது, பியூட்டேன் 70 சதவீதம் மற்றும் ப்ரோப்பேன் 30 சதவீதத்தைக் கொண்டுள்ளது. இன்று முதல் “Propane Max 30% Vol” என்று கேஸ் சிலிண்டரில் அச்சிட்டு வெளியிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென்றும், லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் அறிவித்தார்.