follow the truth

follow the truth

October, 2, 2024
Homeஉள்நாடுஎல்லா மதங்களும் நல்ல வாழ்க்கையை வாழவே போதிக்கின்றன - பிரதமர்

எல்லா மதங்களும் நல்ல வாழ்க்கையை வாழவே போதிக்கின்றன – பிரதமர்

Published on

தன்னை சிலுவையில் அறைந்து கொன்றவர்களை கூட வெறுக்காது இயேசு கிறிஸ்து இவ்வுலகிற்கு அற்புதமான பாடம் புகட்டியுள்ளார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கேகாலை புனித மரியாள் தேவாலயத்தை அடிப்படையாகக் கொண்டு கேகாலை புனித மரியாள் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்ற அரச நத்தார் விழாவில் அலரி மாளிகையிலிருந்து ஸும் தொழில்நுட்பம் ஊடாக இன்று (20) கலந்து கொண்ட உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அரச நத்தார் விழாவை இப்பிரதேசத்தில் நடத்துவதுடன் அதனைச் சுற்றியுள்ள தேவாலயங்களை அபிவிருத்தி செய்யவும், அறநெறி பாடசாலைகளுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்வோம் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியிலும், பிரதமர் என்ற ரீதியிலும் அனைத்து மதத்தினருக்கும் உரிய வழிபாட்டுத் தலங்களின் அபிவிருத்திக்கு நான் முன்னுரிமை அளித்துள்ளேன் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.

சமுதாயத்தில் நல்ல குடிமக்களை உருவாக்கும் வழியை மதம் கற்றுத் தருகிறது. எல்லா மதங்களும் நல்ல வாழ்க்கையை வாழவே போதிக்கின்றன. மற்றபடி வெறுப்பையும் கோபத்தையும் பரப்புவதற்காக அல்ல என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

´அறியாது பாவம் செய்யும் மக்களை மன்னியுங்கள்´ என்றே இறுதி தருணத்திலும் இயேசு கிறிஸ்து குறிப்பிட்டார். சிலுவையில் அறைந்து கொன்றவர்களை கூட வெறுக்காமல் உலகிற்கு அற்புதமான பாடம் புகட்டினார்.

எனவே, சமாதானத்தின் இளவரசர் என்று அழைக்கப்படும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் அரச நத்தார் விழாவை ´மனிதகுலத்தின் அன்பின் அடையாளம் நத்தார்´ என்ற தொனிப்பொருளில் கொண்டாடுவது காலத்திற்கு உகந்தது என்று நான் நம்புகிறேன் என பிரதமர் மேலும் கூறியுள்ளார்.

பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதற்கும் பாதுகாப்பதற்கும், அத்துடன் நாட்டிலுள்ள ஏனைய மதங்களுக்கு அரச அனுசரணை மற்றும் பாதுகாப்பை வழங்குவதற்கும் எமது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. அது வெறும் வார்த்தைகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தாமல் நிரூபித்துள்ளோம்.

மேலும், எந்தவொரு சமூகத்திலும் ஒழுக்கத்தைப் பேணுவதில் மதம் முக்கிய பங்கு வகிக்கிறது. சமூகத்தில் குற்றச்செயல்கள் அதிகரிப்பதற்கு சமூகத்தில் சமய ஒழுக்கம் குறைவதே காரணம் என்பதை நாம் அறிவோம். சமுதாயத்தை சரியான பாதையில் இட்டுச் செல்ல மதத் தலைவர்களின் சரியான வழிகாட்டுதல் இன்று நமக்குத் தேவைப்படுகிறது.

அடித்து, பேசி ஒரு சமூகத்தை உருவாக்க முடியாது. சட்டங்களை விதித்து சிறைகளில் அடைப்பதன் மூலம் ஒரு சமூகம் உருவாகாது. விழுமியங்களையும் சமய நற்பண்புகளையும் வளர்த்து ஒட்டுமொத்த சமுதாயமும் வளர்க்கப்பட வேண்டும். அப்போதுதான் மதம் சார்ந்த சமுதாயத்தின் மூலம் சமுதாயத்தை சரியான பாதையில் கொண்டு செல்ல முடியும். விழுமியங்கள் நிறைந்த சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் இலக்கை அடைய நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். உங்கள் அனைவருக்கும் இனிய நத்தார் தின நல்வாழ்த்துக்கள்! என பிரதமர் கூறியுள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அதிகரிக்கப்பட்ட உர மானியத்தை இரண்டு கட்டங்களாக வழங்கத் தீர்மானம்

அதிகரிக்கப்பட்ட உர மானியத்தை இரண்டு கட்டங்களாக வழங்குவதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. பொதுத் தேர்தல் முடியும் வரை அதிகரிக்கப்பட்ட உர...

ஏழு நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுடன் ஜனாதிபதி இன்று சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 7 நாடுகளின் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளுடன் இன்று (02) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த...

டெங்கு ஒழிப்புக்கான இலங்கையின் முயற்சிகளுக்கு கியூபா அரசாங்கம் தொடர்ந்தும் ஆதரவு

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் இலங்கைக்கான கியூபா தூதுவர் Andres Marcelo Gonzales Gorrido ஆகியோர் இன்று...