சீமெந்துக்கான செஸ் வரியை குறைப்பதற்கு நிதி அமைச்சின் அதிகாரிகள் முன்வைத்த யோசனைக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஒரு கிலோகிராம் சீமெந்து ஒரு ரூபாவால் குறைவதுடன், ஒரு மூட்டை சீமெந்தின் விலை சுமார் 100 ரூபாவால் குறைவதாக நிதி அமைச்சின் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ த சில்வா தலைமையில் அரசாங்க நிதி பற்றிய குழு பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் 14 ஆம் பிரிவின் கீழ் 2400/25 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட கட்டளை, 2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் 3(4) ஆம் பிரிவின் கீழ் 2399/16 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட அறிவித்தல் மற்றும் 2401/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட கட்டளை, 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 06 கட்டளைகள் மற்றும் 2002 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க நலன்புரி நன்மைகள் சட்டத்தின் கீழ் 2415/66 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட அறிவித்தல் என்பன குழுவில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
அதற்கமைய, 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் 14 ஆம் பிரிவின் கீழ் 2400/25 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட கட்டளை தொடர்பில் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. அதன்கீழ் ஏற்றுமதி அபிவிருத்திக்கு விதிக்கப்படும் செஸ் வரி மூலம் பெரும் வருமானத்தை நேரடியாக சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்களுக்கு பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பது பொருத்தம் என குழுவின் தலைவர், நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். அத்துடன், ஹம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணத்தின் போது ஏற்பட்ட கருங்கல் ஏற்றுமதிக்காக விதிக்கப்பட்ட வரியை குறைப்பதற்கான முன்மொழிவுக்கும் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.
அதற்கமைய அந்தக் கருங்கல் ஒரு மில்லியன் மெட்ரிக் டொன் ஏற்றுமதிக்கு ஒரு கன மீட்டருக்கு 1000 ரூபாய் வரி அறவிடப்படும்.