“நான் அக்குறணை பிரதேசத்தில் வேலை செய்கிறேன், காலையில் வேலைக்குச் செல்ல ஆயத்தமாகி வீதியில் சென்று பஸ்ஸுக்காகக் காத்திருந்த போது இரண்டு பாடசாலை மாணவிகள் எனக்கு முன்னால் சென்றனர். அதே சமயம் ஒரு சிறிய கறுப்பு வேன் வந்தது. இரண்டு மாணவிகளில் ஒருத்தியை வேனில் ஏற்றியதைக் கண்டேன்..”
அம்பாக்க, தவுலாகல பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய அர்ஷாத் அஹமட் என்ற இளைஞனே தனது வீரச் செயலை இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்.
தவுலகல ஹபுகஹதத்தென பிரதேசத்தில் கல்வி கற்கச் சென்ற 18 வயது பாடசாலை மாணவியை 50 இலட்சம் ரூபா கப்பம் பெறும் நோக்கில் வேனில் கடத்திச் செல்லும் போது காப்பாற்ற முன்வந்தவர் அர்ஷாத் என்பது தற்போது முழு இலங்கைக்கும் தெரிந்த விடயம்.
இந்த சம்பவம் அருகில் இருந்த சிசிடிவி கேமராவிலும் பதிவாகியுள்ளது. அந்த காட்சிகளில் சம்பவத்தன்று அருகில் இருந்த வாலிபர் ஒருவர் தோளில் இருந்த பையை போட்டுவிட்டு ஓடிச்சென்று மாணவியை கடத்திச் சென்ற நபருடன் மல்லுக்கட்டி மாணவியை காப்பாற்ற வேனில் ஏறியுள்ளார்.
அதன் பின்னர் வேனில் தொங்கிய இளைஞன் வேனுக்குள் ஒருவருடன் சண்டையிட்டுக் கொண்டிருக்க, வேனில் தொங்கிய இளைஞருடன் வேன் வேகமாகச் சென்றது.
ஆனால் அந்த இளைஞனுக்கு என்ன நடந்தது என்பது குறித்து பொலிஸாரிடம் தகவல் கேட்ட போதிலும் அவர் பொலிசுக்கு வரவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
எமது செய்தியாளர் அர்ஷாத்தின் வீட்டுக்குச் சென்றபோது, அவர் காயமடைந்துள்ளதுடன், சம்பவத்தால் கடும் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
“அய்யோ அண்ணா நான் ஒரு வேலைக்காக வெளிநாட்டுக்குப் செல்ல இருந்தவன். இதுனால என்னால அதுவும் முடியல.” தான் சந்தித்த பயங்கரமான அனுபவத்தை அர்ஷத் இவ்வாறு விபரித்தார்.
“ஏன் இந்தக் கடத்தல் நடக்குதுன்னு தெரியலை.. ஆனா இது ஸ்கூல் மாணவி கடத்தல்னு எனக்குப் புரிஞ்சுது.. வேலைக்குப் போகும் வழியில் அதையும் விட்டுவிட்டு வேனை நோக்கி ஓடினேன். அப்போது அந்த பெண் வேனில் உள்ளே தள்ளப்பட்டு விட்டாள்.. நான் போய் தொங்கினேன். கடத்தலில் ஈடுபட்ட இளைஞனை கட்டிப் பிடித்துக் கொண்டேன், என்னையும் பொருட்படுத்தாது, வேனை வேகமாக செலுத்தத் தொடங்கினார். நான் பிடித்திருந்த எனது கையை வெட்டினார்கள் , அவர்கள் என்னை வேனில் இருந்து வெளியே தள்ளினார்கள், நான் என் தந்தையையும் மாமாவையும் அழைத்து அங்கிருந்து மருந்து போடுவதற்கு சென்றேன். அந்த வேனில் மூன்று பேர் இருந்தார்கள். இது எங்கள் குடும்ப பிரச்சினை என்று ஒருவன் கூறினான்..”
எனினும் அர்ஷாத்தின் இந்த வீரச் செயலை பாராட்டி இலங்கை காவல்துறையின் முகநூல் பக்கத்தில் மிக அழகான பிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளதை காண முடிந்தது.
அதில், “கடத்திச் செல்லப்பட்ட பாடசாலை மாணவியை மீட்கச் சென்ற இளைஞருக்கு இலங்கை காவல்துறையின் சல்யூட்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
பிரசுரம் கீழே காட்டப்பட்டுள்ளது;