எதிர்வரும் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடுவதை தவிர்க்குமாறு தென்னாபிரிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் கெய்டன் மெக்கன்சி அந்நாட்டு கிரிக்கெட் சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு எதிராக உலகம் முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு ஆதரவாக அவர் இவ்வாறு கூறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தான் நடத்தும் இந்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப சுற்றில் ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் ஒரே குழுவில் விளையாடுகின்றன.
இந்த போட்டி பெப்ரவரி 21ம் திகதி கராச்சியில் நடைபெற உள்ளது.
தனது பிரேரணைக்கு ஏனைய நாடுகளின் கிரிக்கெட் அமைப்புகளும் சர்வதேச கிரிக்கெட் பேரவையும் உடன்படும் எனவும் தென்னாபிரிக்க விளையாட்டு அமைச்சர் தனது தீர்மானத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.
எனினும், தென்னாப்பிரிக்கா ஆப்கானிஸ்தானுடன் விளையாடுமா… இல்லையா? குறித்த இறுதி முடிவு எடுப்பது தனது பொறுப்பு அல்ல என்று அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
அதில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் தனக்கு இருந்தால் கண்டிப்பாக ஆப்கானிஸ்தானுடன் விளையாட மாட்டேன் என்று கூறியுள்ளார்.
ஆகஸ்ட் 2021 இல் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததால், நாட்டில் பெண்களின் உரிமைகள் கடுமையாக மீறப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.