பேருந்துகள் உட்பட பொதுப் போக்குவரத்தில் சாரதிகளை பணியமர்த்துவதற்கு 60 வயது வரை வயது வரம்பு இருப்பதாக வெளியான செய்திகள் பொய்யானவை என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த வரம்பு 65 வயது வரை இருக்கும் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, தூய்மையான இலங்கை வேலைத்திட்டத்தின் கீழ் பேருந்துகள் தொடர்பில் அமுல்படுத்தப்படும் சில நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஆரம்பிக்கப்படவிருந்த தனியார் பேருந்து பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தொழிற்சங்கங்கள் நேற்று தீர்மானித்துள்ளன.
பயணிகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ள தேவையற்ற உதிரிபாகங்களை அகற்றுவதற்கான சலுகைக் காலத்தை 03 மாதங்களாக நீடிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
இதேவேளை, தூய்மையான இலங்கை வேலைத்திட்டம் தொடர்பான பாராளுமன்ற விவாதம் இம்மாதம் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் நடைபெறும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
மேலும், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் நிபந்தனைகளுக்கு அமைய 95 முச்சக்கர வண்டிகள் மற்றும் பேருந்துகள் மாத்திரம் அலங்கரிக்கப்பட்டு அணிகலன்கள் பொருத்தப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் உதவி ஆணையாளர் சுஜீவ தென்னகோன் தெரிவித்தார்.