2025 ஆம் ஆண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் அண்மையில் கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதன்படி, இன்று காலை 9.30 முதல் 10.30 வரை வாய்மூல கேள்வி பதிலுக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மாலை 5.30 வரையில், 2024 மத்திய ஆண்டு நிதி நிலைமை அறிக்கை தொடர்பில், ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் நாளைய தினம் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதி, அந்நிய செலாவணிச் சட்டத்தின் கீழான கட்டளைகள், கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதி, ஒழுங்குபடுத்தப்பட்ட சீட்டாட்டத் தொழில் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளன.
எதிர்வரும் 9ஆம் திகதி இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழான கட்டளை, விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் பிரசுரிக்கப்பட்ட ஆறு கட்டளைகள், நலன்புரி நன்மைகள் சட்டத்தின் கீழ் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்கு விதி என்பன விவாதிக்கப்படவுள்ளன.
ஜனவரி 10ஆம் திகதி மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான அனுதாபப் பிரேரணைகள் முன்வைக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.