பெரும்பாலானோரின் மிகவும் விருப்பமான ஒரு காய்கறி என்றால் அது உருளைகிழங்கு என்றே கூறலாம்.
இதனால் நிறைய பேர் தங்கள் வீடுகளில் உருளைக்கிழங்கை ஸ்டாக் வைத்திருப்பார்கள். இப்படி உருளைக்கிழங்கை நிறைய வாங்கி சேகரித்து வைத்திருக்கும் போது, சில சமயங்களில் உருளைக்கிழங்கு முளைக்கட்ட தொடங்கிவிடும்.
மேலும் சிலர் உருளைக்கிழங்கை வாங்கும் போது சரியாக கவனிக்காமல் பச்சையாக இருக்கும் உருளைக்கிழங்கை வாங்கியிருப்பார்கள். இப்படி பச்சையாக இருக்கும் உருளைக்கிழங்கு மற்றும் முளைக்கட்டிய உருளைக்கிழங்கை சாப்பிடலாமா என்ற கேள்வி பலருக்கும் இருக்கும்.
ஆனால் இதுக்குறித்து ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர். டிம்பிள் ஜங்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவிக்கையில்;
முளைக்கட்டிய உருளைக்கிழங்கு நச்சுத்தன்மை வாய்ந்தது மற்றும் இது ஃபுட் பாய்சனை ஏற்படுத்துவதோடு, சில சமயங்களில் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம். எனவே இப்படியான உருளைக்கிழங்கை உட்கொள்ளாமல் தூக்கி எறிந்துவிடுங்கள். ஏனெனில் அப்படிப்பட்ட உருளைககிழங்கில் நச்சுக்கலவைகள் அதிகம் இருக்கும். எனவே இப்படியான உருளைக்கிங்கை உட்கொள்ளாதீர்கள்.
முளைக்கட்டிய உருளைக்கிழங்கு ஏன் ஆபத்தானது?
உருளைக்கிழங்கில் சோலனைன் மற்றும் சாகோனைன் ஆகிய இரண்டு கிளைகோ அல்கலாய்டுகள் உள்ளன. இத்தகைய கலவைகள் தக்காளி, கத்திரிக்காய் ஆகியவற்றிலும் காணப்படுகின்றன. இந்த கலவைகளை அளவாக உட்கொள்ளும் போது, அதன் மூலம் உடலுக்கு சில நன்மைகள் கிடைக்கும். ஆனால் அதையே அதிகமாக உட்கொள்ளும் போது, அது ஃபுட் பாய்சனை ஏற்படுத்தி, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.
உருளைக்கிழங்கில் பச்சை நிறமானது குளோரோபில்லில் இருந்து வருகிறது. இது நச்சுத்தன்மையற்றது. இருப்பினும், அதில் அதிகளவில் கிளைகோஅல்கலாய்டு இருக்கும். அதுவும் உருளைக்கிழங்கு முளைக்கட்ட தொடங்கும் போது, அதில் கிளைகோஅல்கலாய்டு அளவு அதிகரிக்கத் தொடங்குகிறது. இதன் விளைவாக இப்படியான உருளைக்கிழங்குகளை உட்கொண்ட சில மணிநேரங்கள் முதல் ஒரு நாள் வரை ஒருசில பக்கவிளைவுகள் தெரியத் தொடங்கும்.
அதுவும் சோலனைன் ஒரு நச்சுப்பொருள். இது குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் நரம்பியல் பிரச்சனைகளை கூட ஏற்படுத்தும். சோலனைன் நிறைந்த உணவை அதிகம் உட்கொள்ளும் போது, அது
பின்வரும் அறிகுறிகளை வெளிப்படுத்தும். அவையாவன:
* அதிக காய்ச்சல்
* குழப்பம்
* குறைவான இரத்த அழுத்தம்
* வேகமான இதயத் துடிப்பு
* தலைவலி
* மரணம்
முளைக்கட்டிய உருளைக்கிழங்கில் உள்ள நச்சுத்தன்மையைக் குறைப்பது எப்படி?
முளைக்கட்டிய உருளைக்கிழங்கின் நச்சுத்தன்மையைக் குறைக்கவும், அகற்றவும் சிறந்த வழி, அவற்றைத் தூக்கி எறிவது தான். ஒருவேளை உருளைக்கிழங்கின் ஒரு பகுதியில் மட்டும் பச்சை நிறம் குவிந்திருந்தால், அந்த பகுதியை மட்டும் அகற்றி விட்டு, மீதமுள்ள பகுதியை சமையலுக்கு பயன்படுத்தலாம்.
இருந்தாலும், சமைப்பதன் மூலம், அதில் உள்ள நச்சுப்பொருட்கள் அழியாது என்பதால், முடிந்தவரை உருளைக்கிழங்கை முளைக்கட்ட விடாமல் சமைத்து சாப்பிட்டு விடுங்கள் மற்றும் உருளைக்கிழங்கை வாங்கும் போதே அதில் பச்சை நிற பகுதி இல்லாதவாறு சரியாக கவனித்து வாங்குங்கள்.