அண்மையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மியன்மார் அகதிகளை நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சினை குறித்த மக்களின் வாழ்க்கையுடன் தொடர்புடையது என்பதால், இவ்வாறான செயற்பாடுகளைத் தவிர்க்குமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
25 சிறுவர்கள் மற்றும் 30 பெண்கள் உட்பட 103 மியன்மார் அகதிகள் நெடுநாள் மீன்பிடி படகில் சட்டவிரோதமாக இந்தியாவுக்குச் சென்று கொண்டிருந்த போது, கடந்த டிசம்பர் 19 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் கடற்பகுதியை அடைந்த நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
அவர்களைத் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய பின்னர், முல்லைத்தீவில் உள்ள விமானப்படை முகாமுக்கு அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் தற்போதைய அரசாங்கம் மியன்மார் அகதிகளை அவர்களது நாட்டுக்குத் திருப்பி அனுப்புவதற்குத் தயாராகி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.