ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு நோய்த்தொற்று பெரும் சேதத்தை ஏற்படுத்தி, பெரிய கவலையை உண்டாக்கும். அதுவும் கடந்த 2019 ஆம் ஆண்டில் தோன்றிய கொவிட்19 தொற்று எவ்வளவு வேகமாக பரவியது மற்றும் அதனால் எவ்வளவு பேர் உயிரிழந்தனர் என்பதை அனைவரும் அறிவோம்.
இந்த ஒரு நோய்த்தொற்று 2 ஆண்டுகளாக பாடாய் படுத்தியது. எப்படியோ தடுப்பூசிகள் மூலம் இதை கட்டுப்படுத்தினாலும், இத்தொற்றின் பக்கவிளைவுகளை நிறைய பேர் இன்னும் சந்தித்து வருகின்றனர். மேலும் பல புதிய அச்சுறுத்தல்களும் அவ்வப்போது வெளிவந்தவாறு உள்ளன.
அப்படி கடந்த சில ஆண்டுகளாக கொவிட்19க்கு அடுத்ததால் நிறைய பாதிப்பை ஏற்படுத்திய ஒரு வைரஸ் தான் H5N1 வைரஸ். இந்த வைரஸ் தொற்றை பறவை காய்ச்சல் என்று அழைப்பர். இந்த வகை வைரஸ் பறவைகளில் பொதுவாக காணப்படும்.
ஆனால் சமீப காலமாக இந்த வைரஸ் கால்நடைகள் மற்றும் குதிரைகள் போன்ற பிற விலங்குகளையும் பாதிக்க தொடங்கியுள்ளன. இந்த வைரஸ் மனிதர்களை அவ்வளவு எளிதில் பரவவில்லை என்றாலும், இந்நிலை மாறுவதற்கான வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது இந்த வைரஸ் மனிதர்களிடையேயும் பரவுவதற்கான வாய்ப்புள்ளது.
மூன்று பெரிய நோய்தொற்றுகள்
ஒவ்வொரு ஆண்டும் மலேரியா, காசநோய் மற்றும் எச்.ஐ.வி போன்ற நோய்களால் சுமார் 2 மில்லியன் பேர் இறந்து வருகின்றனர். இந்த நோய்கள் ஒவ்வொரு ஆண்டும் நிறைய பேரை கொன்று வந்தாலும, மற்றொரு உடல்நல அச்சுறுத்தல் வருகிற 2025-ல் ஏற்படலாம் என்று நிபுணர்கள் கவலை கொள்கின்றனர்.
அதுவும் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்கள் வேகமாக உருமாற்றமடையும் திறன் கொண்டவை என்பதால், இவை எதிர்காலத்தில் பெரும் சேத்த்தை ஏற்படுத்தலாம். குறிப்பாக H5N1 வைரஸ் தொற்று 2025-ல் குறிப்பிடத்தக்க சுகாதார நெருக்கடியாக மாறலாம் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.
H5N1 மட்டும் ஏன் பெரிய கவலையை ஏற்படுத்தும்?
உலகில் மக்கள் கோழியை அதிகளவில் உட்கொண்டு வரும் ஒரு பொதுவான இறைச்சியாகும். இந்த கோழி மற்றும் பறவைகள் மத்தியில் H5N1 வைரஸ் பரவுகிறது. அதுவும் சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள பல மாநிலங்களில் மாடுகளுக்கும், மங்கோலியாவில் குதிரைகளுக்கும் இத்தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே இந்த வைரஸ் மனிதர்களை தாக்குவதற்கான வாய்ப்பு நிறைய உள்ளது. அதுவும் இத்தொற்று ஏற்பட்ட விலங்குகளுடன் நேரடி தொடர்பு அல்லது அவற்றின் இறைச்சி, பால் போன்றவற்றை உட்கொள்வதன் மூலம் பரவுவதற்ன வாய்ப்பு அதிகமாக உள்ளது.
இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்கள் சியாலிக் ஏற்பிகள் எனப்படும் மூலக்கூறு கட்டமைப்புகளுடன் இணைவதன் மூலம் செல்களைப் பாதிக்கின்றன. மனிதர்களுக்குத் தழுவிய காய்ச்சல் வைரஸ்கள் மனித சியாலிக் ஏற்பிகளுடன் திறம்பட பிணைக்கப்படுகின்றன. H5N1 வைரஸ்கள் முதன்மையாக பறவை ஏற்பிகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போதைய வடிவத்தில் இது மனிதர்களிடையே பரவுவதைக் குறைக்கிறது.
ருப்பினும் H5N1 இன் மரபணுவில் ஏற்படும் சிறு ஒற்றை பிறழ்வு மனிதர்களிடம் இருந்து மற்றொரு மனிதருக்கு பரவும் திறனை கணிசமாக மேம்படுத்தும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இப்படி மனிதர்களிடையே பரவத் தொடங்கினால், அது உலகளாவிய பெரும் நோய்த்தொற்றை தூண்டலாம். இந்நிலையில் ஆரம்பத்திலேயே இந்த நோய்த்தொற்றறைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
தடுப்பு நடவடிக்கைகள்
பல நாடுகள் இந்த H5N1 தொற்றின் அச்சுறுத்தலை உணர்ந்து, அதைத் தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. உதாரணமாக, 2025 ஆம் ஆண்டில் பறவை காய்ச்சல் அபாயத்தைக் குறைக்க இங்கிலாந்து H5N1 தடுப்பூசியின் 5 மில்லியன் டோஸ்களை சேமித்து வைத்துள்ளது. என்ன தான் தற்போது வரை H5N1 வைரஸ் மனிதர்களிடையே பரவாமல் இருந்தாலும், பிற்காலத்தில் இதன் தாக்கம் மனிதர்களிடையே ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே தொற்று ஏற்பட்ட பின் அதை தடுப்பது எப்படி என்று யோசிப்பதை விட, ஒருவேளை ஏற்பட்டால் எப்படி கட்டுப்படுத்துவது என்னும் ஆராய்ச்சியை இப்போதே தொடங்கினால், அடுத்த சாத்தியமான தொற்றுநோயைத் தடுக்கலாம்.