யாழ்.மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தம்மையும் வைத்தியசாலையின் நற்பெயரையும் அவமதித்ததாகக் கூறி குறித்த எம்பிக்கு எதிராக 100 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் டி.சத்தியமூர்த்தி வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
யாழ்.பொது வைத்தியசாலைக்குள் பிரவேசித்து ஊழியர்களை இடையூறு செய்து வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் டி.சத்தியமூர்த்தியை அவமதித்தமைக்காக இராமநாதன் அர்ச்சுன எம்.பி கடந்த 17 ஆம் திகதி யாழ் நீதிமன்றில் ஆஜராகியதையடுத்து வைத்தியசாலை பணிப்பாளர் மானநஷ்ட வழக்கு தாக்கல் செய்தார்.
குறித்த வழக்கின் பிரகாரம், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனன் தன்னை பல தடவைகள் திட்டியும், அச்சுறுத்தியும், அவதூறு செய்ததாலும் தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டதன் காரணமாக, மானநஷ்ட வழக்குப் பதிவு செய்து 100 மில்லியன் ரூபாய் இழப்பீடு பெற்றுக்கொள்ளப் போவதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுவிலும், சமூக ஊடகங்கள் ஊடாகவும், பாராளுமன்றத்தில் பல்வேறு இடங்களில் இருந்தும் தனக்கும் நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுன கருத்துகளை வெளியிட்டதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் உரிய மனுவில் தெரிவித்துள்ளார்.
அர்ச்சுனா எம்.பி.க்கு எதிராக இதுவரை 20 வழக்குகள் நாடளாவிய ரீதியில் பல்வேறு நபர்களால் தொடரப்பட்டுள்ளமையும் விசேட அம்சமாகும்.