நாடாளுமன்ற அமர்வு இன்று காலை 9.30க்கு ஆரம்பமாகவுள்ளது.
இதன்போது, அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்ற நிலையியல் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் முதலில் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்திய பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.
இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் பெயரிடப்பட்ட நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும் புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் தேசிய பட்டியலில் பெயரிடப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சத்திய பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.
இதனையடுத்து, பத்தாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது சபாநாயகர் தெரிவு செய்யப்படவுள்ளார்.
கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற 10ஆவது நாடாளுமன்றின் முதலாவது அமர்வின் போது சபாநாயகராக கம்பஹா மாவட்ட உறுப்பினர் அசோக சபுமல் ரன்வல தெரிவு செய்யப்பட்டார்.
பின்னர் கலாநிதி பட்டம் தொடர்பில் எழுந்த சர்ச்சை காரணமாக அவர் பதவி விலகினார்.
தமது கல்வி தகைமைகளை உறுதிப்படுத்தும் வரை குறித்த பதவியிலிருந்து தற்காலிகமாக விலகுவதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சபாநாயகர் பதவிக்கு தற்போது சிலரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, சபாநாயகர் பதவிக்காக பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்னவை நியமிக்கத் தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் நேற்றைய தினம் ஆளுங் கட்சியின் நாடாளுமன்ற குழு கூடி கலந்துரையாடியுள்ளதாக அந்த தகவல்கள் குறிப்பிடுகின்றன.