அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்படும் முதலாவது அரிசித் தொகை இன்றைய தினம் நாட்டை வந்தடையவுள்ளது.
அதற்கமைய 5,200 மெற்றிக் டன் அரிசித் தொகை இன்று இறக்குமதி செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, அரசாங்கத்தினால் அரிசி இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்ட பின்னர் இதுவரையில் தனியார் துறையினரால் 4,800 மெற்றிக் டன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகச் சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி கடந்த 9ஆம் திகதி முதல் இதுவரையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 4,800 மெற்றிக் டன் அரிசியின் தரத்தை, சுகாதாரத்துறையினர் பரிசோதித்ததன் பின்னர் விடுவித்துள்ளதாகச் சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தனியார் துறையினரால் இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 75,000 கிலோகிராம் அரிசித்தொகை மனித பாவனைக்கு ஒவ்வாதது எனக் கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன், சில அரிசி பொதிகளில் காலாவதி திகதி மற்றும் உற்பத்தி திகதி அடங்கிய விவரப்பட்டியல் மாற்றப்பட்டிருந்ததன் காரணமாகக் குறித்த அரிசித் தொகையை விடுவிக்காமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அரிசி தொகையை மீள் ஏற்றுமதி செய்யுமாறு சுங்கத் திணைக்களம் சம்பந்தப்பட்ட இறக்குமதியாளர்களுக்கு அறிவித்துள்ளது.
கையிருப்பில் உள்ள மனித பாவனைக்கு ஒவ்வாத அரிசியை மீள் ஏற்றுமதி செய்யாத பட்சத்தில், அவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்படும் எனச் சம்பந்தப்பட்ட இறக்குமதியாளர்களுக்குச் சுங்கத் திணைக்களம் அறிவித்துள்ளதாகவும் சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.