இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் அழைப்பிற்கிணங்க ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இந்தியாவுக்கு இன்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அவர் மேற்கொள்ளும் முதலாவது வௌிநாட்டு விஜயம் இதுவாகும்.
இந்த விஜயத்தின் போது இந்திய குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட ஏனைய உயர்மட்ட இராஜதந்திரிகளை ஜனாதிபதி சந்தித்து இருதரப்பு பரஸ்பர கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.
இந்த விஜயமானது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் முன்னேற்றுவதாகவும் பலப்படுத்துவதாகவும் அமையுமென வௌிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நடைபெறும் இலங்கை – இந்தியாவுக்கிடையிலான முதலீடு மற்றும் வர்த்தக தொடர்பை மேம்படுத்தும் வர்த்தக மாநாட்டிலும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கலந்துகொள்ளவுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் புத்தகயாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கையானது இந்தியாவின் மிகவும் நெருங்கிய கடல்சார் நாடெனவும் பிரதமரின் சாகர் திட்டம் மற்றும் இந்தியாவின் அயல்நாடுகளுக்கு முன்னுரிமை கொள்கை அடிப்படையில் இலங்கை மிக முக்கிய நாடெனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.