அரிசி தொடர்பில் நாடளாவிய ரீதியில் 50 சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்வது தொடர்பாக அதிகாரசபைக்கு கிடைக்கபெற்ற முறைப்பாடுகளின் பிரகாரம் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பதுக்கி வைக்கப்பட்ட அரிசித் தொகை, விலைப்பட்டியல் காட்சிப்படுத்தப்படாமல் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படுதல், காலாவதியான அரிசியை கண்டறிதல் மற்றும் அரிசியின் தரத்தை ஆய்வு செய்வதற்குமான அதிரடி சோதனையொன்றை இன்றைய தினம் நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள் கொழும்பு புறக்கோட்டை ஐந்தாம் குறுக்குத் தெரு அரிசி மொத்த விற்பனை நிலையங்களில் மேற்கொண்டிருந்தனர்.
அரிசி மறைத்தல் தொடர்பான முறைப்பாடுகள் மற்றும் அரிசி விற்பனை சம்பந்தமான ஏனைய முறைப்பாடுகள் காரணமாகவே இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரியவந்துள்ளது
அத்தோடு அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக நுகர்வோர் அதிகாரசபை சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் அரிசியை கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த பல வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு நாட்டு அரிசியை விற்பனை செய்த பல வர்த்தகர்களுக்கு எதிராக நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் அமில ரத்நாயக்க தெரிவித்தார்.