இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதல் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கலந்து கொள்ளவில்லை. இதன் காரணமாக ரோஹித் சர்மாவுக்கு பதில் ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணியை வழிநடத்தினார்.
பெர்த்-ல் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி 295 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியது. இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அணிக்கு திரும்பிய ரோஹித் சர்மா இந்திய அணியை வழிநடத்தினார்.
ஆஸ்திரேலியா – இந்தியா அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. பலர், ரோஹித் சர்மாவுக்கு பதில் ஜஸ்பிரித் பும்ராவை இந்திய அணி கேப்டனாக நியமிக்கலாம் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ்-இடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த கபில் தேவ், “அதைப் பற்றி இப்போதே பேசுவது மிக சீக்கிரமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு போட்டியில், அவர் சிறந்தவர் என்று சொல்ல முடியாது, ஒரு மோசமான ஆட்டத்தால், அவர் அதற்குத் தகுதியற்றவர் என்றும் சொல்லிவிட முடியாது.”
“ஒரு வீரர் நிறைய கிரிக்கெட் விளையாட வேண்டும். இதில் நிறைய ஏற்ற தாழ்வுகள் இருக்கும். கடினமான நேரத்தில் அவர் எவ்வாறு நடந்துகொள்கிறார் என்பதை பார்த்து தான் ஒரு முடிவுக்கு வர முடியும்,” என்று தெரிவித்தார்.