ஜப்பானில் மனிதர்களை குளிப்பாட்டும் Human Washing Machine புதிய இயந்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜப்பானின் Science Co, நிறுவனம் உருவாக்கிய இந்த இயந்திரம், குளிக்க நேரமில்லாதவர்களுக்கு பெரும் சுலபமாக இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நவீன வொஷிங் மெஷினுக்கு ‘மிராய் நிங்கன் சென்டகுகி’ என்று பெயர்வைத்துள்ளது. இதற்கு “எதிர்காலத்தின் மனித வொஷிங் மெஷின்“ என்பது பொருளாகும்.
இந்த சலவை இயந்திரம் ஒரு மனிதனைக் கழுவ 15 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறது. நீங்கள் அதன் நாற்காலி மீது ஏறியதும் மெஷினில் பாதியளவு வெதுவெதுப்பான நீர் நிரம்பும். பின்னர் மெஷினில் இருந்து நீர் குமிழிகளாக வெடிக்கிறது.
இது உங்கள் தோலில் இருந்து அழுக்குகளை நீக்குகிறது. நீங்கள் அமர்ந்திருக்கும் நாற்காலியில் உள்ள மின் உணரிகள், உங்களின் உடலின் உயிரியல் தகவல்களைச் சேகரித்து நீங்கள் பொருத்தமான வெப்பநிலையில் கழுவப்படுவதை உறுதிசெய்யும்.
இதில் பிளாஸ்டிக் ‘மசாஜ் பந்துகள்’ அடங்கும். இது உடலை மட்டும்தான் சுத்தம் செய்கிறதா என்றால் இல்லை. இது உங்கள் மனதையும் அமைதிப்படுத்துகிறது.
மெஷினில் உள்ள செயற்கை நுண்ணறிவு ஏஐ [AI] சென்சார் உங்களின் சேகரிக்கப்பட்ட உடலின் உயிரியல் தகவல்களை ஆராய்ந்து உங்கள் மனதை அமைதிப்படுத்தும் காட்சி மற்றும் ஒலி அடங்கிய வீடியோவை நாற்காலி முன் ஒளிபரப்புகிறது. விளைவு, உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் விரைவான குளியல்.
இந்த அதிநவீன மனித Washing Machine ஒசாகா கன்சாய் எக்ஸ்போவில் விரைவில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. அங்கு 1,000 விருந்தினர்கள் இந்த குளியலை முயற்சிக்க உள்ளனர்.