வீடற்ற நிலையில் தாய்நாட்டில் விடுதியில் வாழ்வது போன்ற யுகத்தை எதிர்வரும் ஆண்டுகளில் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரும், பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் 800 பேருக்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தல் மற்றும் களனிவெலி புகையிரத பாதையை விரிவுபடுத்தும் நடவடிக்கையின் போது அகற்றப்பட்ட மக்கள் உள்ளிட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தினருக்காக நிர்மாணிக்கப்பட்ட 528 வீடுகளை கொண்ட கொலொம்தொட சரசவி உயன தொடர் மாடிக் குடியிருப்பை திறந்துவைத்து நேற்று (15) உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மூன்று கோபுரங்களாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வீடமைப்புத் தொகுதியின் ஒன்று கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு முழுமையாக அர்ப்பணிக்கப்படவுள்ளது. அதை விடுதியாக பயன்படுத்துவதற்கு இந்த வீடமைப்பு திட்டத்திற்காக காணிகளை வழங்கிய மக்களுக்கும் களனிவெலி புகையிரத பாதை விஸ்தரிப்பின் போது வெளியேற்றப்பட்ட மக்களுக்கும் இந்த வீட்டுத் திட்டத்தில் வீடுகள் கிடைக்கப்பெறும் என பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வீடற்ற மக்களுக்கு அவர்களின் தாயகத்தின் உண்மையான உரிமைகளை வழங்குவதே எமது நோக்கமாகும். நாங்கள் அமுல்படுத்தும் வீட்டுத் திட்டங்களில் சிங்களவர், தமிழ், முஸ்லிம் என்ற இனப் பாகுபாடு கிடையாது. மேலும், கட்சி பிளவு இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
வீடற்றவர்கள் தன் சொந்த ஊரில் விடுதியில் குடியிருப்பவனைப் போன்றவர்கள் என்பதை நினைவில் வையுங்கள். இன்னும் சில வருடங்களில் அந்த சகாப்தம் முடிவுக்கு வர வேண்டும்.ஒரு கொள்கையுடன் நாம் இந்த வீட்டுத்திட்டத்தை முன்னெடுத்துள்ளோம். இது அரசியல் உள்நோக்கம் கொண்ட திட்டம் அல்ல.
நம் நாடு குறித்து எண்ணியே நாம் வீடுகளை கட்டுகிறோம். வீட்டுத்திட்டத்தை மக்கள் சார்பான திட்டமாக செயல்படுத்தி வருகிறோம்.மேலும் நாம் கொடுக்கும் வீட்டில் குடும்பமாக வாழ்வதற்கு ஏற்ற சூழல் அமைய வேண்டும். அந்த வீட்டில் சுதந்திரமாக வாழ வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சுபீட்சத்தின் நோக்கு கொள்கைக்கு அமைய, ஒவ்வொரு குடும்பத்திற்கும் வசதியான வீட்டை வழங்குவதை அரசாங்கம் நோக்கமாக கொண்டுள்ளது. இதன் கீழ் நகர்ப்புற, கிராமப்புற, தோட்ட மற்றும் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்திற்காக வீடுகள் நிர்மாணிக்கப்படும். நாடு முழுவதும் இந்த வீட்டுத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளோம்.
2015 ஆம் ஆண்டில், கொழும்பு நகரம் ‘வேகமாக அபிவிருத்தியடையும் நகரம்’ என்ற சர்வதேச விருதைக் கூட பெற்றது. அவை அனைத்தும் நல்லாட்சி அரசாங்கத்தால் அழிக்கப்பட்டது. இப்போது நாம் எங்கே விட்டோமோ அந்த இடத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த குறுகிய காலத்தில் நாங்கள் பல பணிகளை செய்துள்ளோம். ஒவ்வொரு குடும்பமும் வாழ்வதற்குத் தகுந்த வீடு அமைத்து தருவதுடன், நகர்ப்புற மேம்பாடு திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என கூற வேண்டும்.
அரசியல் நோக்கத்திற்காக அன்றி, நாட்டின் எதிர்காலம் பற்றி சிந்தித்தே நாம் இந்த வீட்டுத்திட்டத்தை செயல்படுத்துகிறோம் என பிரதமர் குறிப்பிட்டார்.