இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள ஸ்வர்ண நாடு அரிசியின் மொத்த விலை தற்போது 25 இந்திய ரூபாவாக காணப்படுகின்றது.
அதன்படி இலங்கை நாணயத்தில் சுமார் 85 ரூபாவாகும்.
கப்பல் கட்டணத்துடன், அந்த வகை அரிசியின் மொத்த விலை நூறு ரூபாயை நெருங்கும் போது, கொழும்பு துறைமுகத்தினூடாக இறக்குமதி செய்யும் திறனை கொண்டிருக்கும்.
உள்நாட்டு சந்தையில் பெருமளவு உயர்ந்துள்ள அரிசியின் விலை இந்த மொத்த அரிசி இறக்குமதியால் குறையும் என அரிசி இறக்குமதியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அண்மையில் சிறிய அரிசி ஆலை உரிமையாளர்களும் இந்தியாவில் இருந்து அரிசியை இறக்குமதி செய்தால் சந்தையில் 135 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என தெரிவித்தனர்.
நாட்டின் சந்தையில் தற்போது நாடு அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், கிலோ ஒன்றின் விலை 240 ரூபாயை தாண்டியுள்ளது.
நிலைமையை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவிலிருந்து 70,000 மெட்ரிக் டன் நாட்டு அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த அரிசி இறக்குமதிக்கான விநியோகஸ்தர்களைத் தெரிவு செய்வதற்காக லக் சதொச ஊடாக டெண்டர் கோரப்பட்டுள்ளதுடன், இறக்குமதியாளர்கள் 7 நாட்களுக்குள் சமர்ப்பிக்க முடியும்.
லக் சதொச கடைகள் மூலமாகவும் பல்பொருள் அங்காடிகள் மற்றும் பொது மொத்த விற்பனை நிலையங்கள் மூலமாகவும் அரிசி விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பண்டிகை காலத்துக்கு முன்னதாக இந்த அரிசியை சந்தைக்கு வெளியிட அரசாங்கம் எதிர்பார்க்கிறது.