உண்மையான தொழிலாளர் தலைவர்கள் போராடுவது குறுகிய அரசியல் நலன்களுக்காக அல்ல என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
35 ஆண்டுகளுக்கும் மேலாக தொழிற்சங்கத் துறையில் பணியாற்றி, உழைக்கும் மக்களுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய தொழிலாளர் தலைவர்கள் மற்றும் அரச சேவையில் ஈடுபட்டு தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்காக தமது சேவை காலத்தை அர்ப்பணித்த அரச அதிகாரிகளை கௌரவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு அலரி மாளிகையில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டார்.
கௌரவிப்பு விழாவில், தொழிலாளர் சமூகத்தினருக்காக உன்னத சேவையாற்றிய 09 பிரபல தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் ஓய்வுபெற்ற இரண்டு அரசாங்க அதிகாரிகள் பிரதமரினால் கௌரவிக்கப்பட்டனர்.
உழைக்கும் மக்களின் நலனை மேம்படுத்தி திருப்திகரமான இலங்கை உழைக்கும் மக்கள் சக்தியை உருவாக்குவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தொழில் அமைச்சராக இருந்த போது அவர்களினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சிரம வாசனா நிதியத்தின் அனுசரணையில் தொழில் அமைச்சும், நிதி அமைச்சும் இணைந்து இவ்விழாவை ஏற்பாடு செய்திருந்தன.
நமது நாடு சுதந்திரம் அடைந்து எதிர்வரும் பெப்ரவரி 4ம் திகதியுடன் 74 ஆண்டுகளாகின்றன. அந்த சுதந்திரத்தை நாம் சாதாரணமாக பெறவில்லை. அந்த சுதந்திரத்தை பெறுவதற்கு தொழிலாளர் இயக்கம் பெரும் தியாகங்களை செய்தது. அவர்களின் அர்ப்பணிப்பு இல்லாவிட்டால், நமது சுதந்திரம் தாமதமாகியிருக்கும்.
அன்று முதல் நமது நாட்டின் தொழிலாளர் தலைவர்கள் இந்நாட்டில் சுதந்திரம், ஜனநாயகம், சமத்துவம் ஆகியவற்றுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர். அது மாத்திரமன்றி தொழிற்சங்க இயக்கங்களைக் கட்டியெழுப்பி, நாடு எதிர்நோக்கும் சவால்களை ஒவ்வொன்றாக முறியடிப்பதே அவர்களது எதிர்பார்ப்பாக காணப்பட்டது என பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தொழிற்சங்க போராட்டம் என்பது குளிரூட்டப்பட்ட அறையிலிருந்து செய்யக்கூடியதொன்றல்ல. அடிவாங்குவதற்கும் நேரிடும். சிறையில் அடைப்படவும் நேரிடும். இன்று இங்குள்ள தொழிலாளர் தலைவர்களுக்கு அது குறித்து புதிதாக கூற வேண்டிய அவசியமில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எமது லெஸ்லி தேவேந்திர அவர்களுக்கு இவ்விடயத்தில் 57 வருட அனுபவம் உள்ளது. ஜே.ஆரின் காலத்தில் தொழிலாளர்களுக்காக போராடச் சென்று 12 வருடங்களாக பொய் வழக்குகள் போடப்பட்டு வேலையை இழந்தது எனக்கு நினைவிருக்கிறது. மேலும் அவருக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இதேபோன்ற கசப்பான அனுபவங்களை இங்குள்ள பிற தொழிலாளர் தலைவர்களும் கொண்டுள்ளனர். ஆனால் அந்த விடயங்களை கொண்டு தொழிலாளர் தலைவர்களின் வாய்களை யாராலும் அடைக்க முடியாது.
உண்மையான தொழிலாளர் தலைவர்கள் போராடுவது குறுகிய அரசியல் நலன்களுக்காக அல்ல. வேலையிழந்து சிறை சென்றாலும் எத்தனை இன்னல்கள் வந்தாலும் சகித்துக் கொண்டு போராடுகிறார்கள். இன்று இங்குள்ள தொழிலாளர் தலைவர்கள் உழைக்கும் மக்களுக்கு தங்களால் இயன்றவரை நேர்மையாக சேவையாற்றியிருக்கிறார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.
நாட்டின் பொருளாதாரத்தின் உந்து சக்தி உழைக்கும் மக்களே. அவர்களுக்கு ஒரு பாதிப்பின் போது தேவைப்படும்போது நிவாரணம் வழங்க அரசு பணத்தை செலவழிப்பதற்கு 1995 ஆம் ஆண்டு வரை முறையொன்று காணப்படவில்லை. நான் தொழில் அமைச்சராக இருந்தபோது, இந்த தொழிலாளர் தலைவர்களில் பலர் என்னுடன் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். நீண்ட நாட்களாக ஒருவரையொருவர் அறிந்தவர்கள். எனவே, இவர்களின் துயரமும் வேதனையும் நமக்கு புரியும். இதன் விளைவாக, அந்த தோழர்களின் நலனை மேம்படுத்தவும், அவர்களை திருப்திகரமான தொழிலாளர் சக்தியாக உருவாக்கவும் ´சிரம வாசனா நிதியத்தை நிறுவ முடிந்தது.
அது மட்டுமின்றி, உழைக்கும் சமுதாயத்திற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த தொழிலாளர் தலைவர்களையும், அதிகாரிகளையும் அங்கீகரித்துப் பாராட்ட வேண்டும் என்று நினைத்தோம். அப்படித்தான் சிரம வாசனா நிதியத்தை சட்டப்பூர்வ நோக்கமாக்கி, தொழிலாளர் தலைவர்களுக்கு அரச அங்கீகாரத்துடன் இந்த அங்கீகாரம் கிடைக்க வழி வகுத்தது. எனினும், தொழிலாளர்களின் சார்பாக நான் நின்றதால், தொழில் அமைச்சில் இருந்து மீன்பிடி அமைச்சுக்கு மாற நேர்ந்தது. அந்த கடந்த காலம் உங்களுக்கு நினைவிருக்கும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.