இலங்கை அதிகாரிகள் தங்களது சீர்திருத்த நிகழ்ச்சி நிரலில் நிலைத்து நின்று பொருளாதாரத்தை நிலையான வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாகச் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஷ்டலினா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை அதிகாரிகள் சர்வதேச நாணய நிதியத்தினால் ஆதரிக்கப்படும் பொருளாதார சீர்திருத்தத் திட்டத்தைச் செயற்படுத்தி வருகின்றனர்.
கடன் நிலைத்தன்மை மற்றும் வெளிப்புற நம்பகத்தன்மை என்பவற்றை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
பொருளாதார மீட்சி, பணவீக்கம் குறைவடைந்துள்ளமை மற்றும் கையிருப்பு அதிகரித்துள்ளமை என்பன இந்த திட்டத்தின் சிறந்த தொடக்கமாக உள்ளன.
இதன்படி, மூன்றாவது மீளாய்வுக்குப் பின்னர் இலங்கை, சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாளர்கள் மட்ட உடன்பாட்டை எட்டியுள்ளது.
அதேநேரம், மீதமுள்ள ஏனைய கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களை இலங்கை அதிகாரிகள் தொடர்ந்தும் நிறைவு செய்து வருகின்றனர்.
இந்த கூட்டு முயற்சியானது இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முயற்சிகளின் வெற்றிக்கு ஆதரவளிக்கும் எனச் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஷ்டலினா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார்.