இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே பதற்றமான சூழல் நிலவுவது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே இப்போது இந்த போர் மேலும் பெரிதாகும் ஒரு ஆபத்தான சூழல் உருவாகியுள்ளது. ஏற்கனவே இஸ்ரேல்- ஈரான் இடையே போர் வெடித்துள்ள நிலையில், இப்போது மற்றொரு அரபு நாட்டிற்கு எதிராகவும் இஸ்ரேல் சில பரபர கருத்தைத் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் இஸ்ரேல் நாட்டை சுற்றி பதற்றம் இருப்பது அனைவருக்கும் தெரியும். ஒரு பக்கம் ஹமாஸ், ஹிஸ்புல்லா அமைப்புகளுக்கு எதிராக இஸ்ரேல் போரிட்டு வருகிறது. மறுபுறம் இஸ்ரேல் ஈரான் இடையேயும் நேரடியாகப் போர் வெடிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்தச் சூழலில் இப்போது இஸ்ரேல் நாட்டிற்கும் மற்றொரு அரபு நாடான ஐக்கிய அமீரகத்திற்கும் இடையே மோதல் வெடிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
யூதக் குழுவான சபாத் என்ற அமைப்பின் தூதுவரான ஸ்வி கோகன் என்பவர் கடந்த வியாழக்கிழமை திடீரென மாயமானார். ஐக்கிய அமீரகத்தில் மாயமான அவர் அப்போது முதல் அவர் எங்கே இருக்கிறார் என்றே தெரியாத ஒரு சூழலே நிலவியது. இந்தச் சூழலில் அவர் அங்குச் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது இப்போது மிகப் பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் வெடிக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், இது தொடர்பான விசாரணையில் ஐக்கிய அமீரகம் இறங்கியுள்ளது.
இதை யூதர்களுக்கு எதிரான பயங்கரவாத சம்பவம் என்று குறிப்பிட்டுள்ள இஸ்ரேல் அரசும் தனது உளவு அமைப்பான மொசாட் மூலம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கடந்த வியாழக்கிழமை மாயமான ஸ்வி கோகனின் சடலம் இப்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவரது கொலை என்பது ஒரு கிரிமினல் யூத-விரோத பயங்கரவாதச் செயலாகும். குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த இஸ்ரேல் அரசு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும்” என்று அதில் கூறப்பட்டு இருந்தது.
கோகன் மாயமானது முதலே அவரது குடும்பத்தினருடன் இஸ்ரேல் அதிகாரிகள் தொடர்பில் இருந்துள்ளனர். இஸ்ரேல்-மால்டோவன் நாட்டவரான கோகன் சடலமாக மீட்கப்பட்டது இப்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஐக்கிய அமீரகத்தின் உள்துறை அமைச்சகம் இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில், வரும் காலங்களில் இது பெரிய பிரச்சினையாக வெடிக்கும் ஆபத்து இருக்கிறது.
இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அமீரக நாடுகளுக்கு இடையே கடந்த காலங்களில் நல்லுறவு இருந்தது இல்லை. இருப்பினும், இரு தரப்பிற்கும் இடையே அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா பெரியளவில் முயன்ற நிலையில், கடந்த 2020ல் இதற்குப் பலன் கிடைத்தது. இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்தக்கூடிய ஆபிரகாம் உடன்படிக்கை அப்போது கையெழுத்தானது. அதன் பிறகே வளைகுடா நாடுகளான பஹ்ரைன், அமீரகம், மொராக்கோ, சூடான் ஆகியவை இஸ்ரேலுடன் முறையான தூதரக உறவுகள் ஏற்பட்டன.
ஆனாலும், கூட இஸ்ரேல் தனது மக்களை அத்தியாவசியமான பயணங்களுக்கு மட்டுமே ஐக்கிய அமீரகம் செல்ல வேண்டும் என எச்சரித்து இருந்தது. பயங்கரவாத நடவடிக்கைகளை இருப்பதால் ஐக்கிய அமீரகத்தில் இஸ்ரேல் நாட்டவர்களுக்கு ஆபத்து இருக்கும் என்றும் எச்சரித்து இருந்தது. இந்தச் சூழலில் தான் ஸ்வி கோகன் ஐக்கிய அமீரகத்தில் உயிரிழந்துள்ளார். இதற்கு இஸ்ரேலும் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ள நிலையில், இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் கூட ஏற்படலாம் என்று அஞ்சப்படுகிறது.