ஆயுதப்படையின் நினைவு தினம் – 2024 முப்படைகளின் தளபதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில், கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் அமைந்துள்ள இராணுவ வீரர்களின் நினைவு தூபிக்கு அருகில் இன்று(24) நடைபெற்றது.
முதலாம் உலகப் போரில் இருந்து இன்று வரை தாய்நாட்டின் பாதுகாப்பிற்காக உயிர் தியாகம் செய்த சிப்பாய்களை நினைவுகூரும் முகமாக இலங்கை இரணுவ சேவையிலிருந்து ஓய்வுபெற்றோர் சங்கத்தினால் இராணுவத்தினர் ஒத்துழைப்புடன் வருடாந்தம் இந்நிகழ்வை ஏற்பாடு செய்யப்படுகிறது.
நிகழ்விடத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை இலங்கை இரணுவ சேவையிலிருந்து ஓய்வுபெற்றோர் சங்கத்தின் பொதுச் செயலாளர் லெப்டினன் கேணல் (ஓய்வு) அஜித் சியம்பலாபிட்டிய வரவேற்றார்.
சர்வமத வழிபாடுகளின் பின்னர் உயிர் தியாகம் செய்த வீரர்களை நினைவுகூரும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், இலங்கை இராணுவ சேவையிலிருந்து ஓய்வுபெற்றோர் சங்கத்தின் பிரதிநிதிகள் இராணுவ நினைவுதூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.