எதிர்க்கட்சியில் இருக்கும் போது எத்தனை பொய்களை கூறினாலும், அரசாங்கம் பொறுப்பேற்றதும் நாட்டின் அபிவிருத்தியை நடைமுறை ரீதியாக மேற்கொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
காலியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியுள்ளதாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி ஒவ்வொருவரின் குணாதிசயங்களையும் படுகொலை செய்து தேர்தல் முகாம்களில் வெற்றி பெறுவது வீரம் அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தை சுத்தம் செய்வதற்கு முன்னர் கட்சியில் உள்ள பொய்யர்களை சுத்தப்படுத்த வேண்டும் என தற்போதைய ஆளும் கட்சிக்கு நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்திடம் ஒரு வேலைத்திட்டமோ கொள்கையோ இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் திட்டம் எதுவும் இல்லை எனவும், பாடசாலை மாணவர்களின் பாடப் புத்தகங்களுக்கான வரியை குறைக்க இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.