தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியைப் பெற்றுக் கொள்வது குறித்து பரிசீலிக்கப்படும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று (31) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறினார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
“.. முன்னர் புதிய அரசுகள் பதவி வகுக்கும் போது அவர்களுடன் இணையக்கூடாது என்று பலரும் நினைத்த காலங்கள் உண்டு. அது கட்சியின் நிலைப்பாடு அல்ல.. ஆனால் எனது தனிப்பட்ட கருத்து அவர்களுடன் இணைவதில் எவ்வித பிரச்சினையையும் நான் கண்டதில்லை. நல்லவற்றினை நாம் வரவேற்க வேண்டும்.
சந்திரசேகரனின் விளக்கம் பற்றி நான் ஏன் வீணாக அலட்டிக் கொள்ள வேண்டும்? அநுர குமார திசாநாயக்கவுடன் ஆறு வருடங்களுக்கு முன்னர் நான் மே தினமன்று யாழ்பாணத்தில் சிவப்பு சட்டை அணிந்து நடந்த படம் இருக்கிறது.. பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னர் நான் காலியில் இருந்து கொழும்புக்கு நடை பாதையாக பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் நடந்து வந்த படமும் இருக்கின்றது. ஆகவே மக்கள் உரிமைகளுக்காக தொழிலாளர்களுக்காக தொழிற்சங்கங்களுக்காக பலவிடயங்களில் நாங்கள் சேர்ந்து பயணித்த காலங்கள் நிறையே இருக்குது.
அதற்காக அமைச்சுப்பதவிகளை குறிவைப்பதோ ஓடிச்சென்று பக்கத்தில் நின்று படம் எடுக்கும் செயற்பாடுகளிலோ நாங்கள் ஈடுபடுவதில்லை. நாங்கள் ஈடுபடுவதாக இருந்தால் ஒரு ஆக்கபூர்வமான செயற்பாட்டுக்கு நாங்கள் சேர்ந்து பயணிப்போம். பதவிகளுக்காகவோ கதிரைகளுக்காகவோ எங்கள் கட்சி இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடாது. இது சந்திரசேகரனுக்கு தெரியாவிட்டால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது..”