கொழும்பு மாவட்டத்தில் மிகப் பெறுமதியான இரண்டு காணிகளை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பான உடன்படிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த இரண்டு காணிகளை குத்தகைக்கு வழங்குவதன் மூலம் ஒரு பில்லியன் டொலரை வருமானமாக பெற அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபை இதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதனடிப்படையில், இந்திய முதலீட்டாளர் ஒருவருக்கு கொழும்பு தெமட்டகொடை பிரதேசத்தல் 5 ஏக்கர் காணி 200 மில்லியன் டொலர்களுக்கு குத்தகைக்கு வழங்கப்படவுள்ளதுடன் அதில் தனியார் மருத்துவமனை நிர்மாணிக்கப்படவுள்ளது.
இதனிடையே சீனா -துபாய் கூட்டு முதலீட்டு திட்டத்திற்கான 10 ஏக்கர் நிலம் குத்தகைக்கு வழங்கப்படவுள்ளதுடன் இதன் ஊடாக 750 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானம் கிடைக்கவுள்ளது.
இந்த முதலீட்டு திட்டங்களுக்கான புரிந்துணர்வு உடன்படிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன் அவை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மேலும் கொழும்பு கோட்டையில் உள்ள 1.5 ஏக்கர் காணி மலேசியாவின் கலப்பு முதலீட்டுத் திட்டத்திற்கான குத்தகைக்கு வழங்கப்படவுள்ளது. மலேசிய முதலீட்டாளருக்கு 125 மில்லியன் டொலர்களுக்கு இந்த காணி குத்தகைக்கு வழங்கப்படவுள்ளது.
இதனை தவிர கொழும்பு டி.ஆர்.விஜேவர்தன மாவத்தையில் உள்ள 1.5 ஏக்கர் காணி ஹொட்டல் மற்றும் வீடமைப்புத் திட்டத்திற்கான சீனாவின் நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை சிங்கப்பூர் நிறுவனம் ஒன்று கட்டுநாயக்க மற்றும் காலியில் சில காணிகளில் முதலீடு செய்ய எதிர்பார்த்துள்ளதுடன் ஜா-எல பிரதேசத்திலும் சில காணிகளில் முதலீடு செய்ய உத்தேசித்துள்ளது.