முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை இரத்து செய்யக்கூடாது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தனக்கு எந்தவித சலுகைகளும் தேவையில்லை எனவும் ஏனைய ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாத்தளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
“ஜனாதிபதிகளின் வீடுகள் அகற்றப்படுகின்றன. எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. நான் வீட்டில் வசிக்கவில்லை. எனக்கு இது ஒரு பிரச்சினையல்ல. சந்திரிகா மேடத்தை ஏன் வெளியேற்றுகிறார்கள்? அந்த வீட்டை அவருக்குக் கொடுங்கள்.
ஆனால் மனிதாபிமானமாக நடந்து கொள்ளுங்கள். மஹிந்த ராஜபக்ச அவர்களின் உயிருக்கு பாதுகாப்பு என்றால், போரை முடிவுக்கு கொண்டு வந்தவரை நினைத்து பாருங்கள். இன்று எல்லாரும் ஒரே மாதிரி கூக்குரலிடுகிறார்கள். இன்று மக்கள் மத்தியில் பிரபலங்கள் எடுபடுவதில்லை. பாதுகாப்பு பிரச்சினை இருந்தால், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
மற்றவர்களுக்கு கொடுங்கள். என்னுடைய அனைத்தையும் அகற்றுங்கள்.. இப்போது என்னைத்தானே திட்டுகிறீர்கள்… 120 கோடிகளுக்கு சீஸ், முந்திரி ஏன்னு நான் சாப்பிட்டுள்ளதாக கூறினீர்கள் பரவாயில்லை. தற்போது சம்பளம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சொன்னதைச் செய்யுங்கள், அனைவரின் ஆதரவும் உங்களுக்கு உண்டு தானே.. நான் இந்த பாராளுமன்றத்தை பாதுகாக்க வேண்டும் என்று நினைத்தேன்..”