2011ஆம் ஆண்டு காணாமல் போன மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் தொடர்பிலான வழக்கு விசாரணையின் சாட்சியாளராக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அது தொடர்பான சாட்சியங்களை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தைத் தவிர வேறு எந்த நீதிமன்றத்திலும் வழங்கத் தயார் என அவரது சட்டத்தரணி உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சாட்சியமளிக்க அழைக்க முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் ஆஜரான ரொமேஷ் டி சில்வா, இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இந்த மனு நேற்று (22) உச்ச நீதிமன்றத்தின் பிரிதி பத்மன் சூரசேன, ஷிரான் குணரத்ன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அப்போது, கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, குறித்த வழக்கு தொடர்பாக யாழ்ப்பாணம் நீதிமன்றில் சாட்சியமளிக்க முடியாது என தமது கட்சிக்காரரால் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டது.
ஆனால், யாழ்ப்பாணம் நீதிமன்றத்தைத் தவிர வேறு நீதிமன்றங்களில் சாட்சியமளிக்கத் தயார் என ஜனாதிபதியின் சட்டத்தரணி தெரிவித்தார்.
அதற்கு மனுதாரர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, இந்த மனுவை மார்ச் 18ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி காணாமல் போனமை தொடர்பில் அவர்களது உறவினர்களினால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு தொடர்பில் சாட்சியமளிக்க யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றில் அன்றைய பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றிய கோட்டாபய ராஜபக்ஷ அழைக்கப்பட்டுள்ளார்.
உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் யாழ்.நீதிவான் நீதிமன்றத்திற்குச் சென்று சாட்சியமளிக்க முடியாது எனவும், எனவே குறித்த அழைப்பாணையை செல்லுபடியற்ற உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி கோட்டாபய ராஜபக்ஷ 2019ஆம் ஆண்டு மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை சமர்ப்பித்திருந்தார்.
இந்தக் கோரிக்கையை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக செயற்படுவதால் சாட்சியமளிக்க அழைக்க முடியாது என உத்தரவு பிறப்பித்திருந்தது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டத்திற்கு முரணானது என தீர்ப்பளிக்குமாறும், கோட்டாபய ராஜபக்ஷ பதவியை இராஜினாமா செய்துள்ளமையினால் சாட்சியமளிக்க அழைக்குமாறு உத்தரவு பிறப்பிக்குமாறும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர்.